பட்டாகத்தியால் கேக் வெட்டிய தனுஷ் ரசிகர்கள்…

நெல்லையில் நடந்த சாதி கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் நடிகர் தனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கருணாஸ் கட்சியினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ள நிலையில், திரையரங்கில் 4 அடி உயர பித்தளை வாளால் கேக் வெட்ட முயற்சித்த தனுஷ் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு எதிராக குறிப்பிட்ட சாதி அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். 

டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனுஷுக்கு கொலை மிரட்டல் அதிகரித்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் , பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு கிராமம் போல பிரமாண்ட செட் அமைத்து நெல்லையில் கடந்த சில வாரங்களாக நடந்து வருகின்றது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கருணாஸ் கட்சியை சேர்ந்த 14 பேர் சேர்ந்து நெல்லை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் நடிகர் தனுஷ் மற்றும் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு எதிராக புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம், மணியாச்சி பகுதிகளில் நடந்த சாதி கலவரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என பெயரிடப்பட்ட, கட்டிடத்தை நடிகர் தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் தென் மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இதுபோன்ற படப்பிடிப்புகளால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளதால் நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 40 ஆவது படமான ஜெகமே மந்திரம் படத்தின் மோசன் போஸ்டர் வெளியீட்டை நெல்லை ராம் திரையரங்கில் கொண்டாட தனுஷ் அங்கு வருவதாக தகவல் பரவியதால் வெளி மாவட்டங்களில் இருந்து எல்லாம் ரசிகர்கள் அங்கு வந்திருந்தனர்.

கரூரில் இருந்து வேன் பிடித்து நண்பர்களுடன் வந்திருந்த சுள்ளான் செந்தில் என்பவர் 4 அடி உயர பித்தளை வாள் கொண்டு கேக் வெட்ட முயற்சித்த போது காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டார்.

அந்த வாளை பறிமுதல் செய்த காவல் துறையினர் வாள் ஏந்திவந்த சுள்ளான் செந்திலையும் கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்த களேபரத்தால் கடைசிவரை ரசிகர்களின் நாயகன் தனுஷ் அங்கு வரவில்லை.

அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து ரசிகர் மன்ற தலைவர்களை வரவழைத்து தனுஷ் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே