7 உட்பிரிவு சாதியினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரில் அழைக்கவேண்டும் இதற்கு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதுதொடர்பாக, கடந்த 2019 மார்ச் மாதம், ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் தமிழக அரசு நியமித்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை இனி தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி பட்டியலினத்தவர் பட்டியலில் மாற்றங்கள் செய்ய அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

தற்போது அந்த மசோதா மக்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி மக்களவையில் ஒப்புதல் பெற்றதையடுத்து மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவுள்ளது.

பட்டியலில் மட்டுமே மாற்றம் செய்யப்படும் எனவும், மற்றபடி பட்டியலின சலுகைகள் தொடரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விரைவில் மாநிலங்களவையிலும் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்படும்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த மசோதா அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே