மும்பை அணிக்கு எதிராக தில்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா, டிரெண்ட் போல்ட் அற்புதமாகப் பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.

புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள மும்பை அணி, பிளேஆஃப்புக்குத் தகுதியடைந்துள்ளது. மேலும் முதல் இரு இடங்களில் ஓர் இடமும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

தில்லி அணி 14 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது. ஒரு வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியும்.

துபையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் தேர்வாகியுள்ளார். பேட்டின்சனுக்குப் பதிலாக நாதன் கோல்டர் நைல். ரஹானே, தேஷ்பாண்டே, அக்‌ஷர் படேலுக்குப் பதிலாக பிரித்வி ஷா, ஹர்ஷல் படேல், பிரவீன் டுபே ஆகியோர் தில்லி அணியில் தேர்வாகியுள்ளார்கள்.

இந்த ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் போட்டியில் 200 ஆட்டங்களை விளையாடும் முதல் அணி என்கிற பெருமையை மும்பை பெற்றுள்ளது.

மும்பை அணியின் அற்புதமான பந்துவீச்சால் தில்லி பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதல் தடுமாறினார்கள். ஷிகர் தவன் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிரித்வி ஷாவை 10 ரன்களில் வீழ்த்தினார் போல்ட்.

முதல் ஆறு ஓவர்களில் தில்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் மட்டுமே எடுத்தது. 9-வது ஓவரின்போது பந்துவீச வந்தார் பும்ரா. இதன்பிறகு தில்லி அணி மேலும் தடுமாறியது.

10-வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது தில்லி அணி.

ஸ்ரேயஸ் ஐயரை 25 ரன்களில் வீழ்த்தினார் ராகுல் சஹார். பும்ரா தனது 2-வது ஓவரில் ஸ்டாய்னிஸை 2 ரன்களிலும் ரிஷப் பந்தை 21 ரன்களிலும் ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்த ஒரு ஓவரால் தில்லி அணியின் அனைத்து திட்டங்களும் பாழாயின.

பிறகு ஹர்ஷல் படேலை 5 ரன்களில் வீழ்த்தினார் பும்ரா.

ஹெட்மையர் 11 ரன்களில் கோல்டர் நைல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அஸ்வின், ரபாடா தலா 12 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

மும்பை அணியின் அபாரமான பந்துவீச்சால் தில்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது.

பும்ரா, டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே