தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்ட வாய்ப்பு – சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது, பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்தாள் கொரோனா வைரஸை ஒழித்துவிடலாம் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

நேற்று 1,700 க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இரண்டாவது கொரோனா வைரஸ் பரவல் அச்சம் எழுந்துள்ளது.

மேலும், தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு அமலாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், இரண்டாவது அலைக்கான அறிகுறிகள் தெரியவில்லை.

பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடித்தால், கொரோனா வைரஸ் தொற்று பரவல் பிரச்சனை இருக்காது. மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம்.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிப்பால் தினசரி 2 ஆயிரத்தை தாண்டும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் ‘DOUBLE MUTANT’ வகை கொரோனா இதுவரை கண்டறியப்படவில்லை. 1.28 லட்சம் கிராமப்புறங்களில், சுமார் 2 ஆயிரம் கிராமப்புறங்களில் இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக நகரங்களில் 1.22 லட்சம் தெருக்களில் 3,960ல் மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

25 லட்சம் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தியுள்ளோம். இன்னும் 10 லட்சம் தடுப்பூசி ஏப்ரல் முதல்வாரத்தில் வரும். அறிகுறிகள் இருந்தால் சுயமருத்துவம் பார்த்துக்கொள்ளாமல் மருத்துவமனையை அணுக வேண்டும்

ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா உறுதியாகும் பட்சத்தில், அந்த பகுதி மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதியாக கருதப்படும். கடந்த வருடத்தை போல, ஒரு தெருவையே முழுமையாக அடைக்காமல், தொற்று பாதிக்கப்பட்டவரின் வீட்டில் கிருமி நாசினி தெளித்து தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான பொருட்களை உள்ளாட்சி அமைப்பு வழங்கும்.

தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு என்ற வதந்தி பரவி வருகிறது. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அதிகாரபூர்வமற்ற தகவலை மக்கள் நம்ப வேண்டாம். தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே