லோக்சபா தேர்தல் தேதிகள் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று தமிழ்நாட்டில் புதிய மாநகராட்சிகள் தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அவற்றிற்கு அருகாமையில் அமைந்துள்ள வேகமாக நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து நான்கு புதிய மாநகராட்சிகளை அமைத்துருவாக்கவும் மற்றும் தொடர்பான நடைமுறைகளை தொடங்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
விரைவான நகரமயமாக்கல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்புகளையும், குடிமைச் சேவைகளையும் மேலும் சிறப்பாக வழங்குவதற்கான எண்ணற்ற சவால்களை உருவாக்கியுள்ளது. மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க, இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என அரசு கருதுகிறது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
தேர்தல் நேரத்தில் வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு கவனம் பெறுகிறது. நாமக்கல், திருவண்ணாமலை மக்களின் பல நாள் கோரிக்கையாக இந்த மாநகராட்சி அறிவிப்பு இருந்து வந்தது. அதேபோல் புதுக்கோட்டை, காரைக்குடி மக்களும் நாங்கள் அருகாமையில் உள்ள தஞ்சை, மதுரை போல உயர வேண்டும் என்றால் மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது சரியாக தேர்தல் நேரத்தில் அவர்களின் கோரிக்கைக்கு செவி மடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
அரசின் அறிவிப்பில், இதனடிப்படையில், அரசு, பெருநகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர்ப்புறத் தன்மை கொண்ட, விரைந்து நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள். பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின்விளக்குகள். பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள நகரங்களோடு இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சிகளாக அமைத்துருவாக்கி வருகிறது. இதன்படி, இவ்வரசு, கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர். கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 30.03.2023 அன்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பான உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், மாநகராட்சிகளை அமைத்துருவாக்குதற்கான 4 புதிய நடைமுறைகளை தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் தற்போது ஆணையிட்டுள்ளார்கள். இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி; திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி; நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி: காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி, என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து இன்று (15.3.2024) ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைத்துருவாக்கப்படும்.
இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தவும் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள். பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாகவும் அமையும்., என்று கூறி உள்ளார்.