அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவு – உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் மாவட்ட வாரியாக குடிநீர் ஆலைகள் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.

உரிமம் பெறாத 132 ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அறிக்கை அர்த்தமற்றது என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் 2018-ஆம் ஆண்டு நிலத்தடி நீரை எடுக்க ஆலைகளுக்கு உரிமம் வழங்க வகை செய்யும் அரசாணையை உறுதி செய்யவும்; சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாகவும்; அந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும் கூறினர்.

இந்த வழக்கில் அனுமதியற்ற குடிநீர் ஆலைகளை மூட ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றி மார்ச் 3-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த ஆலையை அல்லாமல் நிலத்தடி நீரை எடுக்கும் கிணறு அல்லது போர்வெல் பகுதியை மட்டும் மூடி சீல் வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள் உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் முறையாக செயல்படுத்தாவிட்டால், தமிழக அரசின் தலைமை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர்.

அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளைமூட உடனடி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர்  சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற தேவைக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் குடிநீருக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் ஒரு சேர பார்க்கக்கூடாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே