கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸைச் செலுத்திய நாடுகள் விவரம்: இந்தியாவில் 1.8% பேர் மட்டுமே முதல் டோஸ் பெற்றதாகத் தகவல்

உலகம் முழுவதும் கரோனா அலை, பல நாடுகளில் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸைச் செலுத்திய நாடுகளின் பட்டியலை ‘அவர் வேர்ல்ட் இன் டேட்டா’ (https://ourworldindata.org/) இணையதளம் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் 12 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பல நாடுகளில் கரோனா அலை இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளதால் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்குப் பயனளிப்பதாக பல மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸைச் செலுத்தியுள்ள நாடுகளின் பட்டியலை ‘அவர் வேர்ல்ட் இன் டேட்டா’ (https://ourworldindata.org/) இணையதளம் வெளியிட்டுள்ளது.

மார்ச் 13ஆம் தேதி வரையிலான நிலவரத்தின் விவரம்

இஸ்ரேல் நாட்டில் பாதி மக்கள் தொகைக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் 59.3% கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. அங்கு 35.2% மக்களுக்குத் தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்த இடங்களில் பிரிட்டன் 34.9% , சிலி 25.1%, அமெரிக்கா 20.6% , பஹ்ரைன் 18.9% , செர்பியா 17.9%, ஹங்கேரி 13.7%, மொராக்கோ 11.4%, பின்லாந்து 10.6% ஆகிய நாடுகள் உள்ளன.

ஆசிய நாடுகளில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. ஆசியாவில் மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் வெறும் 1.8% பேர் மட்டும் கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு மட்டுமே தீர்வு இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், மக்கள் கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே