நடிகை சுமலதாவிற்கு கொரோனா தொற்று உறுதியானது! வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

நடிகையும் எம்பியுமான சுமலதாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட சினிமா துறையில் பல படங்களில் நடித்துள்ளவர் சுமலதா. இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் 80களில் பல படங்களில் சுமலதா நடித்துள்ளார். திசை மாறிய பறவைகள், முரட்டுக்காளை, தீர்ப்பு, அழகிய கண்ணே, ஒரு ஓடை நதியாகிறது போன்ற பல படங்களில் நடித்திருந்தார் சுமலதா.
சினிமாவுக்கு பிறகு சமீபத்தில் அரசியலில் களமிறங்கிய சுமலதா அம்பரீஷ் தற்போது கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். லாக் டவுன் நேரத்தில் தன்னுடைய தொகுதியில் அவர் பணியாற்றி வந்தார்.

தற்போது சுமலதா தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது..

சனிக்கிழமை ஜூலை 4ம் தேதி எனக்கு சிறிய அளவில் தலைவலி மற்றும் தொண்டை வலி இருந்தது. அதனை தொடர்ந்து கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ள முடிவு எடுத்தேன். என்னுடைய தொகுதியில் நான் தொடர்ந்து பணியாற்றி வந்ததால் எனக்கு தொற்று வந்திருக்கும் என நினைத்ததால் உடனே டெஸ்ட் எடுக்க முடிவு செய்தேன். முடிவுகள் தற்போது வந்துள்ளது. அது பாசிட்டிவ் என காட்டி உள்ளது.

எனக்கு மிகக் குறைந்த அளவே அறிகுறிகள் இருப்பதால், எனக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதனால் நான் வீட்டிலேயே தனிமைப் படுத்தி கொண்டு உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். கடவுள் அருளால் எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. அதனால் நான் விரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன் என உறுதியாக இருக்கிறேன். நான் தொடர்பு கொண்ட நபர்கள் பற்றிய முழு விவரத்தையும் நான் அரசு அதிகாரிகளிடம் கூறிவிட்டேன். இருப்பினும் என்னை சந்தித்த நபர்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் உடனே சென்று டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி கொள்வோம் என சுமலதா தெரிவித்துள்ளார்.
சுமலதா கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சுயேட்சை பெண் வேட்பாளர் என்கிற பெருமையை பெற்றார். அவர் எந்த கட்சியுடனும் சேராமல் இருப்பதால் பல சவால்கள் இருப்பதாகவும் ஆனாலும் தன் தொகுதியின் பிரச்சனைகளை நேரடியாக நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் சுமலதாவின் கணவர் கன்னட நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்த நிலையில்,தான் அரசியலுக்கு வந்தது முற்றிலும் ஒரு விபத்து என சுமலதா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் சுமலதாவை எதிர்த்து எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைவிட அதிக வாக்குகள் பெற்று சுமலதா மிகப்பெரிய வெற்றி பெற்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே