கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தொடங்கிவிட்டது: மகாராஷ்டிர அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை தொடங்கிவிட்டதால், பரிசோதனை, தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துங்கள் என்று மகாராஷ்டிர அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்துக்குச் சென்று கடந்த வாரம் மத்திய குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் அங்கு 2-வது அலை தொடங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த எச்சரிக்கையை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அசோக் பூஷன், மகாராஷ்டிர அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”கரோனா வைரஸ் பரவலின் 2-வது கட்ட அலை மகாராஷ்டிராவில் தொடங்கிவிட்டது. ஆதலால், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணித்தல், பரிசோதனையைத் தீவிரப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணித்தல் ஆகிய நடவடிக்கைகள் குறைவாக இருக்கின்றன. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மக்களுக்கு இடையே கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் குறைவாக இருக்கிறது.

தற்போது மகாராஷ்டிராவில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அதன் மூலம் 20 பேருக்குப் பரவக்கூடிய நிலை இருக்கிறது. இது உண்மையில் மிகவும் அதிகமானது. இந்த அளவுக்கு எவ்வாறு ஆழமாக கரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது என்று களப்பணியில் இருப்பவர்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்துதல், பாதியளவு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நடைமுறைப்படுத்துதல், வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பித்தல் போன்றவை மூலம் கரோனா வைரஸ் பரவல் வேகத்தைக் குறைக்க முடியும்.

மத்திய குழுவின் ஆய்வின்படி, சில மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு, பாதி கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு போன்றவை கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், ஊரடங்கு நடவடிக்கை என்பது மிகக் குறைந்த தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும். பரவலின் அளவையும் ஓரளவுக்குத்தான் குறைக்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்

மகாராஷ்டிராவில் கரோனா தொற்று வீதம் 13.21 சதவீதமாகவும், குணமடைந்தோர் 92.21 சதவீதமாகவும், உயிரிழப்பு 2.28 சதவீதமாகவும் இருக்கிறது”.

இவ்வாறு அசோக் பூஷன் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே