நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடக்கம்

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. NEXT இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 21 லட்சத்து 49 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 354 பேர் பலியாகி உள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 468ஆக அதிகரித்துள்ளது.  நோய் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி ஒரே நாளில் 355 பேர் பலியான நிலையில், 3 மாதங்களுக்கு பின் மீண்டும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது

நாடு முழுவதும் இதுவரை 6 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 353 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா உட்பட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், ஒட்டுமொத்த பாதிப்பில் இம்மாநிலங்களில், 84.73 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும், அவரது மனைவி சென்னம்மாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவும் நிலையில், டெல்லி காஜிபூர் சந்தையில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் திரண்டதால் நோய் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், 3 நாட்களுக்கு அலுவலகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்கள் இடையே அதிகளவில் கொரோனா தொற்று பரவி வருவதாக எச்சரித்தார். நோய்த்தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அவர் கூறினார். தமிழகத்திற்கு கூடுதலாக 10 லட்சத்து 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 2 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் வர உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்துள்ள மாவட்டங்களில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 2 வாரங்களுக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்குமாறு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தொற்று பரவல் அதிகரித்துள்ள மாவட்டங்களில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை 100 சதவிகிதம் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே