தஞ்சையில் மேலும் ஒரு பள்ளியில் 8 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று

தஞ்சையில் மேலும் ஒரு பள்ளியில் 8 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்புக்குள்ளான பள்ளிகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு, மார்ச் மாதம் முதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய நிலையில், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 16 பள்ளிகளைச் சேர்ந்த 222 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், 203 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அதேபோல, கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரை ஆறு கல்லூரிகளைச் சேர்ந்த 62 மாணவர்கள் பாதிக்கப்பட்டு இதில், 44 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், தஞ்சை தனியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 230 பள்ளி மாணவர்களில் 203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே