கொரோனா சிகிச்சை மையம் : தோசை சுட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்த அமைச்சர்..!!

மேல்மலையனூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தோசை சுட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. 36 ஆயிரத்திற்கும் மேல் இருந்த பாதிப்பு தற்போது 24 ஆயிரமாக குறைந்துள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாவதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியே பாதிப்பு குறைந்து, விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவோம் என முதல்வர் முக ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் களமிறங்கி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிகிச்சை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில் அவ்வப்போது மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்தும் வருகின்றனர்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார். அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், உணவு தயாரிக்கப்படும் இடத்திற்கு சென்ற அமைச்சர் அதன் தரத்தை ஆய்வு செய்ததோடு தோசையை எப்படி சுட வேண்டும் என சமையல் மாஸ்டர் சுட்டுக் காட்டினார். இதையடுத்து, உணவின் தரம் நன்றாக இருப்பதாக வருவாய் துறையினரை பாராட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே