நாட்டில் 24 மாநிலங்களில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது..!!

24 மாநிலங்களில் கடந்த வாரத்திலிருந்து கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் செய்தியாளர் சந்திப்பில் கூறியது:

“கடந்த வாரத்திலிருந்து 24 மாநிலங்களில் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

15 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு 1,000 முதல் 5,000 வரை பதிவாகிறது. 13 மாநிலங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகிறது.

ஒட்டுமொத்தமாக தினசரி பாதிப்பைக் காட்டிலும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகி வருகிறது. குணமடைவோர் விகிதம் 85.6 சதவிகிதத்திலிருந்து 90 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 20 நாள்களாக பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. மே 7-ம் தேதி சுமார் 4,14,000 பாதிப்புகள் பதிவாகின. இது 3,48,000 ஆகக் குறைந்து, மேலும் 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்து 2,81,000 ஆகப் பதிவானது.

இன்று நாட்டில் சுமார் 2,11,000 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மே 17 முதல் 3 லட்சத்துக்கும் குறைந்த கரோனா பாதிப்புகளே நாட்டில் பதிவாகி வருகின்றன. இது நேர்மறையான முன்னேற்றம். இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே