பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா..!!

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், வீரர் ஹெச்.எஸ்.பிரனாய் ஆகியோர் கரோனாவிலிருந்து ஏற்கெனவே மீண்டாலும், மீண்டும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பாங்காக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாங்காக்கில் தாய்லாந்து ஓபன் தொடருக்காக இந்திய பாட்மிண்டன் அணியினர் சென்றுள்ளனர்.

தாய்லாந்து ஓபன் போட்டி இன்று முதல் 17-ம் தேதி வரையிலும், டொயோட்டா தாய்லாந்து ஓபன் 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலும், பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் ஃபைனல் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும் நடக்கிறது.

இதில் பங்கேற்க இந்திய வீராங்கனை சாய்னா நேவால், அனுராக் காஷ்யப், ஹெச்.எஸ். பிரனாய், கிடம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, அஸ்வினி பொன்னப்பா, சவுரப் வர்மா, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

இதில் திங்கள்கிழமை இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் சாய்னா நேவால், பிரனாய் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் இருவருக்கும் 10 நாட்கள் பாங்காக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.

இருவருடனும் நெருக்கமாக இருந்த அனுராக் காஷ்யப்பும் தனிமைப்படுத்தப்பட்டார் என்று இந்திய பாட்மிண்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மூன்று பேரும் தாய்லாந்தில் நடக்கும் பாட்மிண்டன் போட்டிகளில் விளையாடமாட்டார்கள்.

கடந்த மாதம் சாய்னா, பிரனாய், காஷ்யப், குருசாய்தத், பிரணவ் சோப்ரா ஆகியோருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சையில் இருந்து குணமடைந்தனர்.

பாங்காக் புறப்படும் முன் இவர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்ததையடுத்து, புறப்பட்டுச் சென்றனர்.

இப்போது மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே