தஞ்சாவூரில் மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா..!!

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிகளில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கெனவே 11 பள்ளிகளில் 168 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில், கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை மாணவிகள் 10 பேர் மற்றும் மாரியம்மன் கோவில் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தஞ்சாவூர் பள்ளிகளில் மொத்த பாதிப்பு 180 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல கும்பகோணம் அன்னை கல்லூரியில் ஏற்கெனவே 4 மாணவர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 5 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கூறும்போது, ”தஞ்சாவூர் மாவட்டத்தில் தொற்று உறுதியாகி உள்ள 17 பள்ளிகள், ஒரு பல்கலைக்கழகம் மற்றும் இரண்டு கல்லூரிகளுக்குத் தொற்று விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காததாக அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.

மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சுமார் 6 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 180 பேருக்கு கரோனா பாதிப்பு தெரியவந்ததை அடுத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றால் உரிய அபராதம் விதிக்குமாறு சுகாதாரத் துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இதுவரை 13 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” என்று ஆட்சியர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே