நாட்டில் கொரோனா பாதித்து உயிரிழப்பவர்களின் விகிதம் 2.10% சரிந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதித்து உயிரிழப்பவர்களின் விகிதம் தொடர்ந்து சரிந்து வருவது ஒரு நல்ல அறிகுறி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,55,745 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,050 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 12,30,509 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் தற்போது வரை கொரோனவால் பாதித்த 5,86,298 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,938 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா உயிரிழப்பு விகிதம் சரிந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

