சென்னை ஐஐடியில் 191 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறைச் செயலாளர்

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த்தொற்று அதிகரிப்பு விவகாரம் தொடர்பாக, சென்னை ஐஐடி வளாகத்தில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (டிச. 16) ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“சென்னை ஐஐடியில் நேற்று முன் தினம் 449 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 514 பேருக்கு பரிசோதனை செய்ததில், 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மீதமுள்ள 141 பேருக்கு பரிசோதனை செய்ததில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐஐடியின் அனைத்து விடுதிகளில் உள்ள பணியாளர்கள் என 1,104 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் களப்பணியாற்றியதன் விளைவாக, இன்று 8 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 550 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சதவீதம். அதனால், பதட்டமடையத் தேவையில்லை.

முகக்கவசம் அணியாததுதான் மிகப்பெரிய தவறு. கூட்டத்தில் நின்று சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சாப்பிடும்போது முகக்கவசத்தை அணிய முடியாது. முகக்கவசம் அணியாமல் மற்றவர்களிடம் பேசக்கூடாது.

விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கொள்ளை நோய் சட்டம், பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விதிகளை மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “மாணவர்கள் நிலைகுலையும் விதத்தில் பதட்டம் கொள்ளச் செய்யக்கூடாது. இது ஒரு விபத்து மாதிரிதான். அப்போது அவர்களுக்கு நாம் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.

திருமணம், இறப்பு கூட்டங்களை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

நிகழ்வுகள் முடிந்த பின்னர் வீட்டுக்குச் சென்று வாழ்த்தோ, ஆறுதலோ தெரிவிக்கலாம்.

வீடுகளில் ஏதேனும் கொண்டாட்டங்களில் கூடி கலையும்போது தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது.

தடுப்பூசி நிச்சயம் வரும். அது படிப்படியாக கொடுக்கப்படும். அதுவரை நாம் கவனமாக இருப்பதுதான் நமக்கு நல்லது.

தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக அதிகமான ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளது” என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே