அமெரிக்காவில் புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு வன உயிரின பூங்காவில் உள்ள விலங்குகளையும் தீவிர கண்காணிப்பு செய்யுமாறு கோரியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ப்ரான்க்ஸ் வன உயிரியல் பூங்காவில் உள்ள 4 வயதான நாடியா என்றழைக்கப்படும் பெண் புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு தேசிய கால்நடை சேவை ஆய்வகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் சில நாட்களாக பூங்காவில் உள்ள சிங்கங்கள் மற்றும் புலிகளுக்கு மூச்சு தொடர்பான நோய் அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து 4 வயதான புலிக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது.

பூங்காவில் பணியாற்ற ஊழியர் மூலம் இந்த நோய் விலங்குகளுக்கு தொற்றியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது வரை பூங்காவில் இருக்கும் பிற விலங்குகளுக்கு தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.

இருப்பினும் பிற விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டுமா என்ற முடிவை விலங்குகள் நலத்துறை எடுக்கும்.

இந்த முடிவுகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று இருக்கும் மனிதர்கள் யாரும் குணமடையும் வரை கால்நடைகள், செல்லப் பிராணிகள், விலங்குகளோடு நெருங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.

இதுகுறித்து மத்திய வன உயிரியல் ஆணையம் மாநிலங்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “சிசிடிவி மூலமாகவோ,நேரடியாகவோ விலங்குகளின் நடவடிக்கைகளில் வழக்கத்திற்கு மாறாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

பாதுகாப்பு கவச உடைகள் இல்லாமல் விலங்குகளை பராமரிப்பாளர்கள் அணுகக் கூடாது.

மாமிசம் உண்ணிகள், சிங்கம்,புலி போன்ற பெரிய பூனை வகையினங்கள், மரநாய்கள், குரங்கினங்களை கூடுதல் கவனத்தோடு கண்காணிக்க வேண்டும்.

ஏதேனும் விலங்கிற்கு அறிகுறி தென்பட்டால் 2 வாரங்களுக்கு ஒரு முறை கோவிட்19 நோய்க்கான மாதிரிகளை அனைத்து வகையான பாதுகாப்பு வசதிகளோடு எடுத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் சோதிக்க வேண்டும்.

அனைத்து வன உயிரியல் பூங்காக்களும் மாநில பொது சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே