ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி

கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சாதாரண மக்கள் முதல் ஆளுநர் மாளிகை வரை கொரோனா வைரஸ் பாரபட்சமின்றி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இதனை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையிலும், பாதிப்பு குறைந்ததாக தெரியவில்லை.

நேற்று மட்டும் தமிழகத்தில் 1,982 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மதனந்தபுரம் கே.பழனிக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், தற்போது அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே