திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்..!!

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

இதில் விவசாயிகளை பாதிக்கும் மசோதாக்களுக்கு எதிராக பல்முனை போராட்டம் நடத்துவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா என 3 மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் தாக்கல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவியில் இருந்து விலகினார்.

இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த சட்டங்களுக்கு எதிராக 25ம் தேதி பாரத் பந்த்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் மத்திய அரசின் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.

இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாக்களுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் இந்த மசோதாக்களுக்கு எதிராக மிகப்பெரிய பல்முனை போராட்டத்தை அனைத்து கட்சி சார்பில் நடத்துவது குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

வருகிற 25ம் தேதி நடைபெறும் “பாரத் பந்த்” போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே