2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக காங்கிரஸ் பாடுபடும் – தினேஷ் குண்டுராவ்

திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்கும் ராகுல் காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் செயல்படும் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று அளித்த பேட்டியின்போது, ”மத்திய அரசின் திட்டங்களை மாநில அதிமுக அரசு எதிர்க்கத் தயங்குகிறது.

ஆட்சியில் இருப்பதால் அதிமுகவினர் தயங்குகிறார்கள். அடுத்து வருவது திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி” எனும் பொருள்படப் பேசியதாகக் கூறப்பட்டது.

பின்னர் இதுகுறித்துச் சுட்டிக்காட்டப்பட்டதால் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று தினேஷ் குண்டுராவ் விடுத்துள்ள அறிக்கை:

‘2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் கட்சி பாடுபடும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட எங்கள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என்ற தமது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பே, ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என முதன்முதலாக ஸ்டாலின் அறிவித்ததை, நாங்கள் நன்றியுணர்வுடன் நினைவில் கொண்டுள்ளோம்.

இத்தகைய அறிவிப்பால் கவரப்பட்ட தமிழக மக்கள், மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில், 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்தனர்.

அதேபோன்று, ஸ்டாலின் அடுத்த முதல்வராக வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையில், வரும் தேர்தலை திமுகவுடன் காங்கிரஸ் இணைந்து சந்திக்கும்.

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை இதுதான் என்பதை நான் வலியுறுத்திக் கூறுகின்றேன்.

வியாழக்கிழமை காலை சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நான் தெரிவித்த கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், இந்த விளக்கத்தை அளிக்கின்றேன்.

தயவுசெய்து இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டுகின்றேன்’.

இவ்வாறு குண்டுராவ் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே