ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை..!!

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வரான என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை எதிர்த்து ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. இது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அதிமுக, பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன.

இந்த கூட்டணியில் பாமக இடம்பெறவில்லை. திமுக- காங்கிரஸ்- விசிக கூட்டணி அமைத்துள்ளன.

முன்னாள் முதல்வர் என்.ஆர். ரங்கசாமி தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். 

ஏனாம் தொகுதியில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய மல்லாடி கிருஷ்ணாராவுக்குதான் செல்வாக்கு அதிகம். தற்போது மல்லாடியார் ஆதரவுடன் ரங்கசாமி ஏனாமில் போட்ட்டியிடுகிறார்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை கடைசிநாள். கடைசி நிமிடம் வரை காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் ஏனாம் தொகுதியில் வேட்பாளரையே அறிவிக்காமல் காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. இது அக்கட்சி நிர்வாகிகளை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே