மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலருக்கு வாழ்த்துகள் – கமல்ஹாசன் ட்வீட்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

அதில் இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த அறிக்கையில், இருவரின் உடலில் அதிக அளவு காயம் இருந்தது. இதனால் சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு முகாந்திரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், காவலர்கள் கொடுத்த அறிக்கைக்கும் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு மாறுபாடுகள் அதிகமாக இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

அதன் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம்.

டிஜிபியின் உத்தரவிற்காக காத்திருக்காமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக விசாரணையை கையிலெடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு சமர்பித்திருக்கும் அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

அதில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக்காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய கடுமையாக தாக்கியதையும், இதனால் காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை ஏற்பட்டதையும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், “சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே