கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் காய்கனி சந்தை கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு மூடப்பட்டது.
தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய சந்தையான இச்சந்தையில் ஏறத்தாழ 450 கடைகள் உள்ளன.
இச்சந்தைக்கு நாள்தோறும் வெளி மாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து சுமார் 50 லாரிகளில் ஏறத்தாழ 300 டன் அளவுக்கு காய்கனிகள் வரத்து இருக்கும்.
இந்நிலையில், மே 8-ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து உருளைக்கிழங்கு ஏற்றி வரப்பட்ட லாரியை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு கும்பகோணம் அருகே நீலத்தநல்லூரிலுள்ள சோதனைச் சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
எனவே தாராசுரம் காய்கனி சந்தையும் ஞாயிற்றுக்கிழமை இரவு மூடப்பட்டது.
மேலும் இச்சந்தை முன், பாதுகாப்புக்காகக் காவல் துறையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே இச்சந்தை வளாகத்தில் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காய்கனி சந்தை வியாபாரிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் சந்தைக்கு பதிலாக வேறு இடத்தில் சந்தை அமைப்பதற்கான நடவடிக்கையில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.