கால்வன் பள்ளத்தாக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட சீன ராணுவம்..!!

கடந்தாண்டு ஜூன் மாதம் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 4 சீன ராணுவத்தினர் பலியானதாக சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியா – சீனா இடையே, கடந்தாண்டு மே மாதம் முதல், எல்லையில் மோதல் நிலவி வருகிறது.

கடந்த ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய – சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது.

சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் சீன தரப்பில், பலியானவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களின் பதில் தாக்குதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்ததாக சீனா அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

அவர்களது பெயர்களையும் சீனா வெளியிட்டுள்ளது.

சென் ஹாங்ஜுன், சென் சியாங்ராங், சியாவோ சியுவான் மற்றும் வாங் ஜுயோரன் ஆகியோர் இந்திய ராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்துள்ளதாக சீன ஊடக அறிக்கைகளை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே