விராலிமலையில் ஜல்லிக்கட்டு நினைவு சிலையை திறந்து வைத்தார் முதல்வர்..!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில், ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.டி.சி. நிறுவனத்தில் 100கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கோதுமை மாவு உற்பத்தி செய்யும் யூனிட்டை திறந்து வைத்தார்.

பின்னர், பேசிய முதலமைச்சர் 2020 ஆம் ஆண்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், நடப்பாண்டில் 820 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து, விராலிமலை சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு சீறிவரும் காளையை வீரர் அடக்க முயல்வது போன்ற சிலையை திறந்து வைத்தார்.

கடந்த 2019-ல் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை படைத்தது.

இதன் நினைவாக, காமராஜர் நகரில் உள்ள ரவுண்டானாவில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த சிலை அமைக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே