3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடத் தொடங்கி இன்றுடன் 6 மாதங்களை கடக்கினறன. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப்ப பெறக்கோரி தில்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் போராட்டம் தொடங்கி 6 மாதங்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தால் இதுவரை நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், டிராக்டர் பேரணி உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்திய விவசாயிகள், தங்கள் போராட்டம் 6 மாதத்தை எட்டியதை நினைவுப்படும் வகையில் இன்று புதன்கிழமை நாடு தழுவிய கருப்பு தின போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். 40 விவசாய சங்கங்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கருப்பு தின போராட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப், சங்குரூர், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தில்லியை நோக்கி படையெடுத்து உள்ளனர்.

மேலும் இப்போராட்டத்தால் கரோனா பரவும் அச்சம் இருப்பதாக ஹரியானா பாஜக அரசு கவலை தெரிவித்துள்ளது. ஆனால் விவசாயிகள் கரோனா நடைமுறைகள் பின்பற்றப்படும் என உறுதியளித்துள்ளனர்.

தில்லி எல்லையில் போராட்டத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படும் எனவும் கிருமி நாசினி முழுமையாக தெளிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பாஜக அரசு தங்களை வில்லனாக சித்தரிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அதில், நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த “விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச்சட்டம் 2020”,
“வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020”, “அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020” ஆகிய மூன்று வேளாண்
சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தில்லியில் தங்கள் போராட்டத்தைத் துவங்கி இன்றுடன் (26.5.2021) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது.

இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை – உணர்வுகளை மதித்து அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு ஒன்றிய அரசு இதுவரை முன்வரவும் இல்லை – ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கவில்லை
என்பது கவலையளிப்பதாக இருக்கிறது.

2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், “இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி – இவற்றை ரத்து செய்திட ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும்” என்று தமிழக மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

எனவே, தில்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாகத் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே