சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஓரிரு மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 10ம் தேதி தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் ஒரிரு மாதங்களே உள்ளதால் அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில் மாநிலத்தில் தேர்தல் நடத்த இருக்கும் நிலவரம் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதில் மாநில தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலர், டிஜிபி, மாவட்ட தேர்தல் அலுவலர்களான ஆட்சியர்கள், மாவட்ட எஸ்பிக்கள், வருமான வரித்துறை அலுவலர்கள் ஆகியோர் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து மேற்கண்ட அதிகாரிகள் புதுவை மாநிலத்திலும் ஆலோசனை நடத்தினார்கள்.

இதையடுத்து தமிழகம் உட்பட விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள அனைத்து மாநிலங்களிலும், தேர்தல் நடத்துவது, பாதுகாப்பு நடவடிக்கை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் கடந்த மாதம் 12ம் தேதி மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லாவிடம் தீவிர ஆலோசனை நடத்தி முடித்துள்ளனர்.

 இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் வரும் 10ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அப்போது தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை எப்படி நடத்துவது, அரசியல் கட்சிகளின் நிலைபாடு என்னவாக உள்ளது.

மொத்த வாக்குப்பெட்டியின் எண்ணிக்கை, தேவைப்படும் பட்சத்தில் அதனை அனுப்பி வைப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான அதிகாரிகளை எப்போது தமிழகம் அனுப்புவது ஆகியவை குறித்து மாநில தேர்தல் அதிகாரியோடு ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

இதைத்தொடர்ந்து புதுவையிலும் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த ஆலோசனையின் முடிந்த பிறகு அடுத்த ஓரிரு வாரங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே