தமிழகத்தில் தமிழர்களுக்கே முன்னுரிமை என முதல்வரால் கூற முடியுமா? – ஸ்டாலின் கேள்வி..!!

‘தமிழுக்கு துரோகம், தமிழர்களுக்கு துரோகம், தமிழ்நாட்டுக்குத் துரோகம் இதுதான் பழனிசாமி ஆட்சியின் முப்பெரும் கொள்கை. இவர்களுக்கு கொள்ளை மட்டுமே இலக்கு. இந்தக் கூட்டத்தைக் கோட்டையை விட்டுவிரட்டுவதற்கு திண்டுக்கல் மக்கள் சபதம் எடுக்கவேண்டும்’ என திண்டுக்கல் மாவட்டம் திமுக சார்பில் நடந்த காணொலி கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

‘தமிழகம் மீட்போம்’ தேர்தல் சிறப்புக் கூட்டத்தில் திண்டுக்கல் மற்றும் பொதுமக்களுடன் காணொலி காட்சி மூலம் பேசிய ஸ்டாலின், “சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து விட்டு கூச்சமே இல்லாமல் மசூதிக்கு போக எடப்பாடி பழனிச்சாமியால் எப்படி முடிகிறது.

தலைநகர் டெல்லி விவசாயிகளின் போராட்டத்தால் 20 நாளாக நடுங்கிக் கொண்டிருக்கிறது.

மூன்று சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கை.

ஆனால் அவர்களை பேச்சுவார்த்தை என்ற பெயரில் வரவழைத்து இந்த சட்டம் நல்ல சட்டம் என மத்திய அரசு பாடம் எடுக்கிறது.

போராடும் விவசாயிகளை உள்துறை அமைச்சர் சந்திக்காதது என்ன காரணம்? வருகின்ற 18ம் தேதி சென்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறக்கூடிய உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என இந்த கூட்டத்தின் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது நூற்றாண்டு காலக் கோரிக்கை. அதனை முதல் நிபந்தனையாக வைத்து கலைஞர் பெற்றுக்கொடுத்தார்.

தமிழ்மொழி காக்க உருவாக்கப்பட்ட செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்று பிரதமர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மைசூரில் பாரதிய பாஷா விஷ்ய வித்யாலயா என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் ஒரு பகுதியாக செம்மொழி தமிழ் ஆளும் நிறுவனத்தை இணைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் தான் இருக்க வேண்டும் இதனை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கூடிய முடிவை திமுக கடுமையாக எதிர்க்கும்.

தமிழுக்கு துரோகம், தமிழ்நாட்டிற்கு துரோகம், தமிழர்களுக்கு துரோகம் இதுதான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் முப்பெரும் கொள்கை. வேளாண் சட்டங்களை ஆதரித்த முதல்வரை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனக் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே