ஆந்திராவில் சட்டமேலவையை கலைக்க அமைச்சரவை ஒப்புதல்

3 தலைநகர் மசோதாவுக்கு மேலவை தடையாக இருக்கும் என்பதால், அதனைக் கலைக்க ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசு முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்த போது அமராவதி புதிய தலைநகராக உருவாக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி அரசு, மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் அமைக்க முடிவு செய்தது. விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், கர்னூல் உயர்நீதிமன்ற தலைநகராக அமைக்கப்படும் என ஜெகன்மோகன் அறிவித்தார்.

ஆனால், அமராவதி தலைநகராக தொடர வேண்டும் என வலியுறுத்தி தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தினர்.

எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றது.

ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருப்பதால் 3 தலைநகர் அமைக்கும் மசோதா நிறைவேறும்.

ஆனால், மேலவையில் அக்கட்சிக்கு வெறும் 9 உறுப்பினர்களே உள்ளனர்.

58 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 28 உறுப்பினர்களும், 8 நியமன மற்றும் இதர உறுப்பினர்களும் உள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சி 3 தலைநகர் மசோதாவை மேலவையில் தோற்கடிக்கும் என்பதால், மேலவையைக் கலைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டப்பேரவையில், மேலவையைக் கலைக்கும் மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே