குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு டிசம்பர் 23-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியிலுள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாண்டிச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வளாகத்தில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த வெவ்வேறு மொழி பேசும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் கார்த்திகேயன், சுப்பையா ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு டிசம்பர் 23-ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.