தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜூன் 1-ம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் கலந்தாலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோவு வரும் ஜூன் 1-ஆம் தேதி 12-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ஜூன் 1ம் தேதி நடத்த பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இதையடுத்து, 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை :
ஜூன் 15 – மொழிப்பாடத் தேர்வு
ஜூன் 17- ஆங்கிலத் தேர்வு
ஜூன் 19 – கணிதம்
ஜூன் 20 – விருப்ப மொழிப் பாடம்
ஜூன் 22 – அறிவியல்
ஜூன் 24- சமூக அறிவியல்
ஜூன் 25 – தொழிற்கல்வி
அதேபோன்று, பிளஸ் 2 இறுதிநாள் தேர்வில் (மாா்ச் 24) பேருந்து கிடைக்காததால் பங்கேற்க முடியாத 36 ஆயிரத்து 842 மாணவா்களுக்கு தோவு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என முதல்வா் தெரிவித்திருந்தாா்.
அவ்வாறு 12ம் வகுப்புக்கான கடைசித் தேர்வை எழுது முடியாமல் போன மாணவர்களுக்கு ஜூன் 18ம் தேதி மறுதேர்வு நடைபெறுகிறது.
11ம் வகுப்புக்கான விடுபட்ட பாடத்துக்கான தேர்வு ஜூன் 16-ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.