நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், மேலும் 3 மாணாக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 மாணாக்கர்களின் தந்தையர்களையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து, சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரகராக செயல்பட்ட ஜோசப் கொடுத்த தகவலின் அடிப்படையில், மேலும் சிலர் ஆள்மாறாட்டம் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் மேலும் 3 மாணாக்கர்களும், அவர்களின் தந்தையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பாலாஜி மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன்,
- எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ்,
- சென்னையை அடுத்த திருப்போரூரில் சத்ய சாய் மருத்துவ கல்லூரி மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். விசாரணையில், உத்தரபிரதேசத்திலும், டெல்லியிலும் இவர்களுக்காக வேறு நபர்கள் நீட் தேர்வு எழுதியதையும், இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறியதையும் 3 மாணாக்கர்களும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில், 4 பேர் தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகிய இருவரும் இன்னும் தேனி கொண்டுவரப்படவில்லை. அவர்களும் விரைவில் தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.