கூந்தல் பிரச்சனை சரி செய்ய உதவும் பெஸ்ட் மூலிகை எண்ணெய், ஈஸியா தயாரிக்கலாம்!

செயற்கையும், பதப்படுத்தி தயாரிக்கும் பொருள்களையும் விரும்பாமல் தலைமுடியை காப்பாற்ற விரும்புபவர்கள் இந்த மூலிகை எண்ணெயை தேர்வு செய்யலாம்.
முடி உதிர்வு, நுனியில் பிளவு, இளநரை, பொலிவிழப்பு, அடர்த்தி குறைவு என்று பல பிரச்சனைகளை கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த சாய்ஸ் மூலிகை எண்ணெய் தான். மூலிகைகள் என்று பலதரப்பட்ட பொருள்கள் நம் அருகில் நிறைந்திருக்கிறது. அதை சரியான முறையில் பயன்படுத்தினால் உடல் உள் உறுப்புகளும், வெளித்தோற்றமும் ஆரோக்கியமாக இருக்கும். அப்படியான பொருள்களில் ஒன்றுதான் துளசி. இது மங்கலகரமான நிகழ்வுகளுக்கும், சளி இருமலை போக்கும் கை வைத்தியத்துக்கும் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசியின் குணம் கூந்தல் பிரச்சனையை தீர்ப்பதிலும் உதவுகிறது. எளிமையான இந்த தயாரிப்பில் கூந்தலின் ஒட்டு மொத்த பிரச்சனையும் படிப்படியாக தீர்ந்துவிடும். அப்படியான மூலிகை எண்ணெய் குறித்து தான் பார்க்கபோகிறோம்.
​எண்ணெய் தயாரிக்கும் முறை
தேவை

துளசி இலைகள் – அரை கப்,

சுத்தமான தேங்காயெண்ணெய்- 3 கப்.

துளசி இலைகளை சுத்தம் செய்து காம்பு நீக்கி வைக்கவும். இலைகளை பொடியாகவும் நறுக்கி கொள்ளலாம். இரும்பு வாணலி அல்லது அடிகனமான மண்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். மிதமான தீயில் அடுப்பு எரியவிடவும். எண்ணெய் சூடேறியதும் துளசி இலைகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் சூடு செய்ததும் அடுப்பை அணைத்து இறக்கி ஆறவிட வேண்டும். இலை கருகலும் இல்லாமலும் பசுமையாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். எண்ணெயும் அதிகம் கொதிக்க கூடாது. இதை இறக்கி சற்று இளஞ்சூடு பதத்துக்கு வந்ததும் ( தலையில் தேய்க்குமளவு பொறுக்கும் சூடு) உள்ளங்கையில் எடுத்து தலையின் ஸ்கால்ப் பகுதியில் தேய்க்க வேண்டும். பிறகு படிப்படியாக கூந்தல் முழுவதும் தடவி விட வேண்டும். துளசி இலைகளோடே தேய்க்கலாம்.
இதையே எண்ணெயாக அதிகளவு காய்ச்சி வைத்துகொண்டு தினமும் கூந்தலின் வேர்க்கால்களில் படும்படி தடவலாம். ஆனால் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தயாரிக்க வேண்டும்.

​மசாஜ் செய்வதும் அவசியம்
தலை முழுக்க இந்த எண்ணெயை தடவி கைவிரல்களை தலையில் நுழைத்து நன்றாக வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். எவ்வளவு ஆழமாக விரல்களை நுழைத்து கூந்தலை மசாஜ் செய்கிறோமோ அவ்வளவு ஊட்டம் கூந்தலுக்கு கிடைக்கும். பிறகு சீப்பு கொண்டு கூந்தலை அழுந்த 100 முறையாவது சீவ வேண்டும். இதனால் முடியின் எல்லா இடங்களிலும் எண்ணெய் பரவல் சமமாக இருக்கும்.

பிறகு கூந்தலை இறுக மேல் நோக்கி முடிந்து அதை கவர் செய்துவிட வேண்டும். இவை நன்றாக கூந்தலில் ஊறவேண்டும். 2 அல்லது 3 மணி நேரம் வரை ஊறவிட்டு பிறகு கூந்தலை சீயக்காய் அல்லது அதிக கெமிக்கல் இல்லாத ஷாம்பு கொண்டு அலசி எடுக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இதை செய்ய வேண்டும். இந்த பராமரிப்பை கூந்தலுக்கு செய்யும் போது வேறுவிதமான எண்ணெய்களையோ பராமரிப்போ மேற்கொள்ளாமல் இருந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

​என்ன பலன் கிடைக்கும்
கூந்தலில் அதிகப்படியான அழுக்கு சேராமல் பார்த்துகொண்டாலும் கூட பொடுகு பிரச்சனை அவ்வபோது வரக்கூடியதுதான். இதை எப்போதும் வேரோடு அழிக்க முடியாது. ஆனால் இதை வலுவிழக்கவும் பாதிப்பில்லாமல் வெளியேற்றவும் முடியும். அதற்கு சரியான வழி இந்த துளசி எண்ணெய்.

துளசி தலையின் வேர்க்கால்களில் மந்தமாகியிருக்கும் ரத்த ஓட்டத்தை தூண்டி விடும். அரிப்பு பிரச்சனைகள் இருக்கும் போது இவை சிறப்பான பலன் தரும். தேங்காயெண்ணெய் எப்போதும் முடிக்கு ஊட்டச்சத்து கொடுக்ககூடியது. முடிக்கு வலு கொடுப்பதால் கூந்தல் உதிர்வு, நுனி பிளவு இருக்காது. முடியின் அடர்த்தி ஆரோக்கியமாக அதிகரிக்கும்.

குறிப்பு
எண்ணெய் காய்ச்சும் போது அதிலும் தேங்காய் எண்ணெய் கொண்டு காய்ச்சும் போது எண்ணெயை கொதிக்கவிட கூடாது. இலேசான சூடு பட்டாலே போதுமானது. மூலைகை பொருள்களை சேர்த்ததற்கு பிறகும் அதிக நேரம் சூடாக்காமல் இறக்கிவிட வேண்டும். எண்ணெய் காய்ச்சுவதற்கு இரும்பு வாணலியை தான் பயன்படுத்த வேண்டும். எண்ணெயை தலைக்கு தினமும் காய்ச்சுவதாக இருந்தால் வாணலியில் நாள் முழுக்க ஊறவிட வேண்டும். எண்ணெயை சேகரிக்கும் போது கண்ணாடி பாட்டிலில் சேகரிக்க வேண்டும்.
நறுமண பொருள்களை சேர்க்க வேண்டாம். இதனால் பேன் தொல்லை அதிகரிக்க கூடும். இந்த துளசி எண்ணெய் பெண்கள் போலவே ஆண்கள், வளரும் பிள்ளைகள் அனைவரும் பயன்படுத்தலாம். பக்கவிளைவும், இருக்காது. அதே நேரம் தலைக்கு தேய்ப்பதற்காக தயாரிக்கப்படும் இந்த எண்ணெயை சருமத்துக்கு பயன்படுத்த வேண்டாம். தொடர்ந்து 3 மாதங்கள் வரை இதை பயன்படுத்தினால் இயல்பான முடி உதிர்தல் அளவு கூட குறைந்திருப்பதை உணரமுடியும். முடி உதிர்வு நின்றாலே படிப்படியாக கூந்தல் பிரச்சனையும் சரி ஆகக்கூடும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே