அசாம் துப்பாக்கி சூட்டில் அடிப்பட்டவர் மீது கொடூரமாக ஏறி மிதித்து ஆட்டம் போட்ட புகைப்படக் கலைஞர்..!! (VIDEO)

அசாமில் போலீசார் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து கீழே விழுந்து கிடந்த நபர் மீது போட்டோகிராபர் ஒருவர் எகிறி குதித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாமில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. முக்கியமாக கோவில் நிலங்கள், விவசாய நிலங்களில் வீடு கட்டி இருப்பவர்கள், அண்டை மாநிலங்களில் இருந்து அசாமிற்கு வந்து வீடு கட்டி இருப்பவர்கள், வங்கதேசத்தில் இருந்து வந்து அசாம் குடியேறியவர்கள் ஆகியோர்களின் ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றி வருகிறது.

இந்த நிலையில் நேற்று அசாமில் டாரங் மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் மொத்தம் 4500 பிகாஸ் ஆக்கிரமிப்பு நிலங்களை அரசு கைப்பற்றியது. அந்த கிராமங்களில் வசித்த 800 குடும்பங்களை அரசு வெளியேற்றியது. இதற்காக அரசு தரப்பு வீடுகளை இடிக்கும் போது அதற்கு எதிராக பொது மக்கள் போராட்டம் செய்ய, அந்த போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்தது.


என்ன நடந்தது?

இந்த போராட்டத்தின் போது அங்கு இருந்த பொது மக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதாகவும், குச்சிகளால் அடித்ததாகவும் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பு தெரிவிக்கிறது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் துப்பாக்கிகளுடன் குவிக்கப்பட்டனர். முதலில் அங்கு இருந்த மக்கள் மீது போலீசார் லத்தி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தாக்குதல்

அதன்பின் அங்கு குச்சிகளை வைத்து போலீசாரை துரத்திய நபர்களை, போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். போராடும் பொது மக்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. குச்சியை ஏந்தியபடி வயதான நபர் ஒருவர் ஓடி வந்த போது அவரை 4 போலீசார் அடுத்தடுத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு குண்டுகள் அவரின் நெஞ்சு பகுதியில் பாய்ந்தது. ஆனாலும் அவருக்கு உயிர் இருந்தது.

போலீசார் தாக்குதல்

கீழே விழுந்து அவர் துடித்துக்கொண்டு இருந்தார். இந்த துப்பாக்கி சூட்டில் சுருண்டு விழுந்த அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினார்கள். அவரை சுற்றி வளைத்து லத்தியை வைத்து போலீசார் கடுமையாக மாறி மாறி இரக்கமே இன்றி தாக்குதல் நடத்தினார்கள். துப்பாக்கி சூட்டில் சுருண்டு விழுந்த பின்பும் கூட போலீசார் அவரின் முகத்தில் மாறி மாறி லத்தியை வைத்து கடுமையாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொடுமை

இதில் கொடூரம் என்னவென்றால் சுருண்டு விழுந்து கிடந்த அந்த நபரின் மீது போட்டோகிராபர் ஒருவர் எகிறி குதித்து, அவர் மீது மாறி மாறி ஜம்ப் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் நெஞ்சிலே மாறி மாறி அந்த போட்டோகிராபர் எகிறி குதித்தது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் இந்த நபர் செய்தி நிறுவனத்தின் போட்டோகிராபர் என்று கூறப்பட்டது. ஆனால் இவர் பிஜாய் சங்கர் பனியா என்று அடையாளம் காணப்பட்டது.


பிஜாய் சங்கர் பனியா

இவர் அங்கு மாவட்ட நிர்வாகத்தின் அரசு தரப்பு போட்டோகிராபர். இவர் அங்கு ஆளும் கட்சியோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர். முக்கியமாக போலீசாரோடு நெருக்கமாக தொடர்பு கொண்டவர். இவர்தான் நேற்று அப்பாவி நபர் துப்பாக்கியால் சுடப்பட்ட பின் அவரின் உடலில் ஏறி குதித்து ஆட்டம் போட்டு இருக்கிறார்.

அடித்தார்

அதன்பின் அந்த நபரை பிஜாய் சங்கர் பனியா அங்கேயே தாக்கினார். தற்போது போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகி உள்ளனர். 11 பேர் காயம் அடைந்துள்ளனர். அசாமில் நடந்த இந்த மனிததன்மையற்ற செயல் இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து அசாம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே