அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் – தமிழக அரசு

முழு ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மே 10 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 9, 10) இரு நாள்களும் அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, முழு ஊரடங்கு காலத்தில், அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாள்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

உணவு விநியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே