அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமேசான் பிரதிநிதிகள் மீது புகார்..!!

அமேசான் இந்தியா நிறுவனத்தின் சட்டப்பிரதிநிதிகள் மீது, லஞ்சம் குறித்த புகார்கள் எழுந்த நிலையில், இது குறித்த விசாரணையில் இறங்கி உள்ளதாக, அமேசான் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ செய்யாமல், ‘ஊழலை நிறுவனம் சகித்துக் கொள்ளாது’ என அமேசான் தெரிவித்துள்ளது.

‘தி மார்னிங் கான்டெக்ஸ்ட்’ தொழில்நுட்பம் மற்றும் வணிகம் குறித்த செய்தி நிறுவனம், அமேசான் நிறுவனத்தின் சட்ட பிரதிநிதிகளின் செயல்பாடு குறித்து, ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. அதில், அமேசானின் இந்திய சட்ட குழு, அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த செய்தி வெளியானதை அடுத்து, அமேசான், அதன் சட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக விசாரணையைத் துவக்கியுள்ளது.இந்த விவகாரத்தில், அதன் மூத்த நிறுவன ஆலோசகர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், குற்றச்சாட்டு குறித்த விரிவான தகவல்களையோ அல்லது விசாரணை எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்பதையோ தெரிவிக்க இயலாது என, அமேசான் கூறியுள்ளது.அமேசான், இந்தியாவில் சந்தை போட்டி விதிகளுக்கு எதிராக செயல்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, இந்திய சந்தைகள் போட்டி ஆணையத்தின் விசாரணைக்கு ஆளாகியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, ‘பியூச்சர் குழுமம்’ அதன் வணிகங்கள் சிலவற்றை, ‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ்’ நிறுவனத்துக்கு 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததை எதிர்த்து, சிங்கப்பூர் சர்வதேச நடுவர்மன்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து தடை பெற்றிருக்கிறது, அமேசான்.

இதற்கிடையே, பியூச்சர் குழுமம் இது சம்பந்தமாக, அமேசானுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளது.இப்படி அண்மைக் காலமாக பல வழக்குகளை மேற்கொண்டு வருகிறது அமேசான். இந்நிலையில், அதன் சட்ட பிரதிநிதிகள் மீது லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே