கொரோனா நோய்த் தொற்று ஜூன், ஜூலை மாதத்தில் உச்சத்தை எட்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அறியப்பட்டாலும் ஏப்ரல் மாதத்தில் இருந்துதான் அதிகரிக்கத் தொடங்கியது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் மார்ச் இறுதிவாரத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
சில தளர்வுகளுடன் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
மாநிலங்களில் 40 நாள்களாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் கடந்த சில நாள்களாகத் திறக்கப்பட்டது.
மது வாங்க குவிந்த மக்களால் சமூக இடைவெளி எல்லாம் காற்றில் பறந்துள்ளது.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா கொரோனா பரவல் தொடர்பாக சில எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில்,“இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தின் மாதிரியைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
எங்களுக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் ஜுன், ஜூலை மாதங்களில் கொரோனா தாக்கம் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கிறோம்.
எந்த அளவுக்கு இருக்கும் என்பதை இப்போது கூற முடியாது. அதில் சில மாறுதல்கள் இருக்கலாம். லாக்டெளனால் கிடைத்த நன்மைகள் என்ன என்பது அப்போதுதான் தெரியவரும்.
கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது இப்போது கூற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், “அடுத்த நான்கு அல்லது ஆறு வாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
ஏனென்றால் நம்மால் நீண்டநாள்களுக்கு லாக்டெளனில் இருக்க முடியாது.
கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை கட்டுப்பாட்டு மண்டலங்களாக மாற்றுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என நேற்று அவர் தெரிவித்திருந்தார்.