வேளாண் சட்டம் ரத்து – திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்,சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்,தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை என மொத்தம் 27 எம்பிக்கள் பங்கேற்று உள்ளனர்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில்,திமுக சார்பில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக,3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற உடனடி மசோதா, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அதிக நிதி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் வலியுறுத்துவது தொடர்பாக,இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்,திமுக எம்பிக்கள் கூட்டத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி உயிர்த்தாகம் செய்த விவசாயிகளுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும்,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான தீர்மானம் முதல்வர் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே