நடிகர் பாண்டுவின் சத்தமில்லா சாதனை..!!

கரோனா தொற்றால் மறைந்த நடிகர் பாண்டு இளம் வயதில் ஓவியக்கல்லூரி மாணவர். எம்ஜிஆருக்குப் பரிச்சயமான அவர் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோது அதன் கட்சிக் கொடியையும், இரட்டை இலை சின்னத்தையும் வடிவமைத்தவர்.

கரோனா தொற்றால் பலியான நடிகர் பாண்டுவை சாதாரண நடிகராக அனைவரும் எண்ணுவர். ஆனால், தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுகவின் சின்னத்தையும், கட்சிக் கொடியையும் வடிவமைத்ததில் பாண்டுவுக்கு முக்கியப் பங்குண்டு. ஓவியரான அவரது தூரிகையில் உருவானதுதான் இரட்டை இலை சின்னமும், அதிமுக கொடியில் அண்ணா படமும் ஆகும்.

நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மூலம் எம்ஜிஆருக்குப் பரிச்சயமான பாண்டு எம்ஜிஆர் படங்களை விதவிதமாக வரைந்து எம்ஜிஆரிடம் பாராட்டு பெற்றவர். இதனால் எம்ஜிஆர் மூலம் அவரது படத்தில் சிறிய வேடங்களில் அறிமுகமான அவர் பின்னாளில் பிரபல நகைச்சுவை நடிகரானார். எம்ஜிஆரின் ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் சிறிய காட்சியில் பாண்டு தோன்றுவார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் ஆரம்பத்தில் கருப்பு சிவப்புக் கொடியும் நடுவில் தாமரைச் சின்னமும் கொண்ட கொடியை வடிவமைக்க எண்ணினார். பின்னர் பாண்டுவிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு அவர் கருப்பு சிவப்புக் கொடியில் அண்ணா ஒற்றை விரலை நீட்டியபடி இருக்கும் கட்சிக் கொடியை வடிவமைத்தார். அதுவே அதிமுகவின் அதிகாரபூர்வக் கொடியானது.

அதேபோல் ஒருநாள் எம்ஜிஆர், பாண்டுவை அழைத்து, இரட்டை இலையை சின்னமாக யோசித்துள்ளோம். வரைந்து கொடு என்று கூறினார். நரம்புகளுடன் கூடிய இரட்டை இலை சின்னத்தை பாண்டு வரைந்து கொடுக்க அதுவே அதிமுகவின் சின்னமானது. தண்டில் மேலும் கீழுமாக இரண்டு இலைகள் இருக்கும், வரி வரியாக நரம்புகள் ஓடும் அந்தச் சின்னம்தான் அதிமுகவின் வெற்றிச் சின்னமாக இப்போதும் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

1973இல் கடும் எதிர்ப்புக்கிடையே ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியானது. அன்று எம்ஜிஆர் போஸ்டர் ஒட்ட, பேனரை வைக்க முடியாத நிலையில் புதிய விளம்பர உத்தியை பாண்டு வடிவமைத்ததுதான் அதன் பின்னர் பல பத்தாண்டுகள் சிறந்த விளம்பர உத்தியாக இருந்தது. வீடுதோறும் சிறிய அளவிலான டோர் ஸ்லிப் எனப்படும் சிறிய வகையிலான போஸ்டரை அவர் உருவாக்கினார்.

அது பல வகைகளிலும் பிரச்சார உத்தியாக மாறியது. இவ்வளவு பெருமைக்குரியவராக இருந்தாலும் பெரிய அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் திரைப்படங்களில் நடித்து வந்தார் பாண்டு.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே