டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது.
டெல்லி சட்டப்பேரவையில் உள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 8ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 62 புள்ளி 59 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த வாக்குகள், 21 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கியது முதல் அரவிந்த் கெஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பெரும் முன்னிலை வகித்தது. குறிப்பாக, எதிர்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளைக் காட்டிலும் மிக அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
சற்று முன்பு வரை ஆம் ஆத்மி கட்சி சுமார் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜரிவால் புது தில்லி தொகுதியிலும், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியபா பாட்பர்காஞ்ச் தொகுதியிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.
பாஜக 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கட்சி முதலில் ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலை வகித்தது. பிறகு அத்தொகுதியிலும் காங்கிரஸ் பின்தங்கியது.
70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, ஆட்சியமைக்க அழைக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள், ஆம் ஆத்மிக்கு தனிப்பெரும்பான்மையை விட கூடுதல் இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றன.
இதனால் டெல்லியில் மீண்டும் அக்கட்சியின் ஆட்சியே அமையும் நிலை உருவாகியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியது முதல், கெஜரிவாலின் வீட்டில் ஆம் ஆத்மி தொண்டர்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2015ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 67 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.
காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.