ஒரு கிலோ தக்காளியை ரூ.40க்கு விற்க இயலும் – வியாபாரிகள் தகவல்..!!

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு வழங்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரி சங்கம் முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் அண்மைக்காலமாக தக்காளி விலை அதிகரித்திருக்கிறது. ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய் முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சிவா என்பவர் ஆஜராகி முறையீடு செய்தார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ஆண்டு மே 5-ந் தேதி கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் மூடப்பட்டு, பின்னர் செப்டம்பர் 28-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டதாக தெரிவித்தார். கோயம்பேடு மார்க்கெட்டில் 86 சென்ட் நிலப்பரப்பில் தக்காளி கிரவுண்ட் என்ற மைதானம் உள்ளது.

அந்த மைதானத்தில்தான் தக்காளி ஏற்றி வரும் லாரிகள் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படும். கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திறந்தாலும் இந்த மைதானத்தை திறக்கவில்லை. இந்த மைதானத்திற்குள் தக்காளியுடன் ஏற்றி வரப்பட்ட பதினொரு லாரிகள் முன்பு நிறுத்தப்பட்டது.

அதிகாரிகள் மைதானத்தை நுழைவு வாயிலை பூட்டி விட்டனர். இதனால் தக்காளிகள் அழுகிய நிலையில் பல நாட்களுக்குப் பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவின்படி லாரிகள் வெளியில் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.. இதனால் வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதன் காரணமாக தக்காளி விலை தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

தற்போது இந்த மைதானத்தை திறந்தால் ஜெய்பூர், உதய்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகம் வழியாக தக்காளி லாரிகள் இங்கு கொண்டு வந்து, மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும். இதன் மூலம் தக்காளி விலை அதிரடியாக குறைக்க முடியும். கிலோ 40 முதல் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ எங்கள் சங்கம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

எனவே தக்காளி மைதானத்தை திறக்க உத்தரவிட வேண்டும் என்ற நிலுவையில் உள்ள வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த நீதிபதி சுரேஷ்குமார் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே நாளை நீதிமன்றம் உத்தரவை பொறுத்து தக்காளியின் விலை ரூ 40 க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே