கர்நாடகத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது – முதலமைச்சர்

கர்நாடகாவில் இருந்து உபரி நீர் மட்டும்தான் கிடைக்கும் என்ற நிலையை மாற்றியது அதிமுக அரசுதான் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியது அதிமுக அரசு தான் என்று குறிப்பிட்டார்.

தண்ணீருக்கு கர்நாடகத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்று கூறினார்.

கர்நாடகாவில் இருந்து உபரி நீர் மட்டும்தான் கிடைக்கும் என்ற நிலையை மாற்றியது அதிமுக அரசுதான் எனக் கூறிய அவர், காவிரி உரிமையை மீட்க சட்டப்போராட்டம் நடத்தி அதிமுக அரசு வெற்றி பெற்றது என்றார்.

மத்திய அரசிடம் எடுத்துரைத்து கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். 

மேலும் தமிழகம் முழுவதும் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், டெல்டா மாவட்டத்திற்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும் ஜனவரியில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு பெற்றுத் தந்த மாநிலம் தமிழகம் எனவும் தெரிவித்தார்.

ஏரி, குளங்களில் தூர்வாரி குடிமராமத்து பணிகள் நடைபெற்றதன் காரணமாக கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை என்று முதலமைச்சர் கூறினார்.

தடுப்பு அணைகளை அதிகப்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தான் விவசாயி என்று கூறுவதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே