நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் வழிநடத்துக் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்திய வம்சாவளி பெண்..!!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும், ‘நாசா’வின் முயற்சியில், இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி, டாக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளது.

பெர்சிவரன்ஸ் ரோவர் ஜி.எம்.டி நேரப்படி சரியாக நேற்று (பிப்.18), வியாழக்கிழமை இரவு 20.55 செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து புதிய ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தையும் பெர்சிவரன்ஸ் ரோவர் அனுப்பியுள்ளது.

இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் பணியை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, செவ்வாய் கிரகத்தின் வேறொரு பள்ளத்தில் நாசா தரையிறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது, நாசா தன் பெர்சிவரன்ஸ் ரோவரை, ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் உள்ள ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கியுள்ளது.

பெர்சிவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடும் என நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாயின் ஜெசெரோ பகுதியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக, ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும், அதில் நீர் இருந்ததாகவும் கருதப்படுகிறது.

எனவே, அப்பகுதியில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த ரோவர் செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தியை நாசா புரொபல்சன் லேபரேட்டரி வழிநடத்தும் குழு தலைவர் ஸ்வாதி மோகன் உறுதி செய்தார்.

ஸ்வாதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு வாகனத்தை அனுப்பும் இந்த திட்டம், 2013ல் துவங்கியதில் இருந்தே அதில் ஈடுபட்டு வந்தார் சுவாதி. ஜி.என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்தார்.

ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை, இவர் உருவாக்கியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவாதி, தன், 1 வயதில், அமெரிக்காவுக்கு சென்றார்.

பள்ளியில் படிக்கும்போது, குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என நினைத்துள்ளார். அதே நேரத்தில், ‘ஸ்டார் டிரெக்’ என்ற, ‘டிவி’ நிகழ்ச்சியைப் பார்த்து, புதிய உலகங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.

விண்வெளி ஆய்வில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

நாசாவின், சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே