திமுக தலைவர் ஸ்டாலின் மாணவர்களை பயமுறுத்த அரசியல் செய்யக்கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அச்சிடப்பட்ட டி-சர்ட் ஒன்றை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் தேர்வு குறித்த கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எல்லா விஷயத்திலும் அவசரப்படுகிறார்.
குழந்தைகள் உயிரோடு அவர் விளையாடக்கூடாது. மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் தர வேண்டியது அரசும், எதிர்க்கட்சிகளும் மாணவர்களை தவறான வழியில் திசை திருப்பக் கூடாது.
தேர்வு காலங்களில் மாணவர்களுக்கு பயம் எழுகிறது.
அந்த தேர்வு பயத்தை போக்க வேண்டியது பெற்றோர்களும் அரசியல்வாதிகளும்.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் மாணவர்களை பயமுறுத்த அரசியல் செய்யக்கூடாது என பேசினார்.
தமிழகத்தில் புதிதாக 13 மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது.
இதில் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக உளளது. இந்த உண்மைகளை மறைத்து எதிர்கட்சித் தலைவர் மாணவர்களின் உயிரோடு விளையாடக்கூடாது.
அதிமுக, பாஜக உறவு சுமூகமாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை பாஜக வரவேற்கிறது. ஹிந்தி தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.
அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்களும் ஒரு மொழியை கற்க வேண்டும் என்பதே பாஜக நிலைப்பாடு.
மும்மொழிக் கொள்கை எங்கள் நிலைப்பாடு. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 75 தொகுதியில் பாஜக வெற்றி தோல்வியை நிர்ணயித்தது.
தற்போது பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்து ஏராளமானோர் அலை அலையாய் வந்து கொண்டுள்ளனர்.
எனவே நாங்கள் தனித்து நின்றாலும் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். இப்போதைக்கு இதே அணி தொடரும். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து தெரியும் என தெரிவித்தார்.

