கோழிக்கோடு விமான விபத்து.. பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!! (VIDEO)

துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குளானதில், இரு விமானிகள் உட்பட 18 பேர்  உயிரிழந்தனர். 

வந்தே பாரத் திட்டத்தின் கீழ்,  துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த பயணிகள் விமானம் நேற்றிரவு இரவு 7.45 மணி அளவில் விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் 184 பயணிகள், 2 விமானிகள், 5 சிப்பந்திகள் உட்பட 191 பேர் பயணம் செய்துள்ளனர்.

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒடுதளத்தில் முழுவதுமாக ஓடிய விமானம், ஓடுதளத்தின் இறுதியில் இருந்த 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் இரு விமானிகள், மற்றும் குழந்தை உள்ளிட்ட 18 பேர் பலியாகி உள்ளதாக மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த முகமது ஜிடான் பைசல்பாபு, ஷானிஷா பைசல் பாபு, ஷாலா ஷாஜகான் ஆகியோர் பயணம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படுகாயமுற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என மோடி உறுதி அளித்ததாகவும், நெருக்கடியை எதிர்கொள்ள கேரள அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் என்று பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து ட்விட்டர் பதிவிட்டுள்ள அவர், “கோழிக்கோடு விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தாகவும், தன் அன்புக்குரியவர்களை இழந்தவர்களை எண்ணி மனம் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் விமானம் விபத்துக்குள்ளான செய்தியை அறிந்து மனவேதனை அடைந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புக்கு குழுவுக்கு உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விமான விபத்து குறித்த தகவல் அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், பாதிக்கப்பட்ட பயணிகள், மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்காக பிரார்த்தனை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து குறித்து ஆளுநர் ஸ்ரீ ஆரிப் முகமது கான்-இடம் கேட்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விமான விபத்து தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள இரண்டு குழுக்களை நியமித்துள்ளதாக விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி தெரவித்துள்ளார்.

விபத்தில் காயமுற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர், கோழிக்கோடு நகரிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கோழிக்கோட்டில் விமானம் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நண்பர்கள், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர், விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே