சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (58). இவர் பழைய பேருந்து நிலையத்தில் பனைமரக்கடை நடத்தி வந்தார்.
இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவரும் அதே பகுதியில் செல்லிடப்பேசி கடை நடத்தி வந்தார். இவர்கள் பொதுமுடக்க விதிகளை மீறியதாக கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், அவர்கள் இருவரும் மர்மமான முறையில் மரணமடைந்தனர்.
இச்சம்பவத்தைத்தொடர்ந்து வியாபாரிகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு பணியாற்றிய காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவர் பிரவீண்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக இச்சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



 
							