உலகளவில் மேலும் 1.30 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு இறந்திருக்க வாய்ப்பு – ஆய்வில் அம்பலம்!

கொரோனா வைரஸ் தொற்று, இந்த பூமிப்பந்தில் அடியெடுத்து வைத்து, முடிந்து போயின 6 மாதங்கள். இந்த பூமிப்பந்தில், ஏறத்தாழ 200 நாடுகளில் கொரோனாவின் அராஜக ஆட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 85 லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. 4½ லட்சத்துக்கும் அதிகமானோரை ஈவிரக்கமின்றி கொன்று குவித்திருக்கிறது கொரோனா. இந்த நூற்றாண்டில் இப்படி வேறெந்த வைரஸ் தொற்றும், இந்த உலகை இப்படி ஆட்டுவிக்கவில்லை.

என்ன நேரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப்போர் வந்ததோ தெரியவில்லை. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி, அமெரிக்காவை பாழ்படுத்தி வருகிறது. உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பு புள்ளி விவரங்களை அள்ளித்தருகிற ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் (நேற்று மதிய நிலவரம்) அதிர வைப்பதாகத்தான் இருக்கிறது.

இதன்படி, அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 91 ஆயிரத்து 200 என்ற அளவை எட்டி விட்டது. 1 லட்சத்து 18 ஆயிரத்து 400-க்கும் அதிகமானவர்களின் உயிர்களை அங்கு கொரோனா பறித்து இருக்கிறது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பிலும் சரி, அது ஏற்படுத்திய உயர்ப்பலியும் சரி, அமெரிக்காதான் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது. அதே போன்றுதான் கொரோனா பரிசோதனையிலும் அந்த நாடுதான் முதல் இடம் வகிக்கிறது. அங்குதான் 2 கோடியே 54 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோரில் அதிக எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 10 நாடுகளின் பட்டியல் (நேற்று மதிய நிலவரப்படி) இது:- முதல் இடம் அமெரிக்கா (21 லட்சத்து, 91 ஆயிரத்து 200). இரண்டாம் இடம், பிரேசில் (9 லட்சத்து 78 ஆயிரத்து 142). மூன்றாம் இடம், ரஷியா (5 லட்சத்து 68 ஆயிரத்து 292), நான்காம் இடம் இந்தியா (3 லட்சத்து 80 ஆயிரத்து 532), ஐந்தாம் இடம் இங்கிலாந்து (3 லட்சத்து 1,935).

ஆறாம் இடத்தில் ஸ்பெயினும் (2 லட்சத்து 45 ஆயிரத்து 268), ஏழாம் இடத்தில் பெருவும் (2 லட்சத்து 44 ஆயிரத்து 388), எட்டாம் இடத்தில் இத்தாலியும் (2 லட்சத்து 38 ஆயிரத்து 159), ஒன்பதாம் இடத்தில் சிலியும் (2 லட்சத்து 25 ஆயிரத்து 103), பத்தாம் இடத்தில் ஈரானும் (1 லட்சத்து 97 ஆயிரத்து 647) உள்ளன. உலகளவில் பலியானோர் எண்ணிக்கையிலும் அமெரிக்காதான் முதல் இடத்தில் (1 லட்சத்து 18 ஆயிரத்து 435) உள்ளது.

இரண்டாவது இடத்தில் பிரேசில் (47 ஆயிரத்து 748) உள்ளது. மூன்றாம் இடத்தில் இங்கிலாந்து (42 ஆயிரதது 373) இருக்கிறது. அதைத் தொடர்ந்து நான்காம் இடத்தில் இத்தாலியும் (34 ஆயிரத்து 514), ஐந்தாம் இடத்தில் பிரான்சும் (29 ஆயிரத்து 606) உள்ளன. ஆறாம் இடத்தில் ஸ்பெயின் (27 ஆயிரத்து 136) உள்ளது. ஏழாம் இடத்தில் மெக்சிகோவும் (19 ஆயிரத்து 747), எட்டாம் இடத்தில் இந்தியாவும் (12 ஆயிரத்து 573), ஒன்பதாம் இடத்தில் பெல்ஜியமும் (9,695), பத்தாம் இடத்தில் ஈரானும் (9,272) உள்ளன.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இங்கிலாந்து கட்டுப்பாடுகளை தொடர்ந்து தளர்த்தி வருகிறது. அந்த வகையில் நேற்று கொரோனா வைரஸ் எச்சரிக்கை நிலை நான்கில் இருந்து மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், வைரஸ் பொது புழக்கத்தில் இருப்பதாக கருதப்படுகிறது. அதே நேரம் கட்டுப்பாடு படிப்படியாக தளர்த்தப்படும் என்பதை இது குறிக்கிறது.

துனிசியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே பொது சுகாதார நிலையை மேம்படுத்தக்கோரி சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். டாக்டர்கள், நர்சுகள், சுகாதார தொழிலாளர்கள், தலைநகரான துனிசில் உள்ள சுகாதார அமைச்சகம் முன் திரண்டு வந்து, கொரோனாவுக்கு எதிரான போரில் திறம்பட செயல்படுவதற்கு பணியாற்றும் சூழலை மேம்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.

தென் ஆப்பிரிக்காவில் மோசமாகி வரும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு அதிபர் சிரில் ராமபோசா, கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முன் வந்துள்ளார். அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அங்கு வேகம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஒரு வாரத்தில் தொற்று பரவல் 37 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிர்ப்பலிகள் குறித்து பி.பி.சி. நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தி உள்ளது. அதில் உலகளவிலான கொரோனா பலி 4 லட்சத்து 40 ஆயிரம் (ஆய்வு கால நிலவரம்) என்ற நிலையில், அதை விட கூடுதலாக 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாகி இருக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது. 27 நாடுகளில் இருந்து ஆரம்ப கட்ட இறப்பு தரவுகளை பி.பி.சி. மதிப்பாய்வு செய்ததில், பல இடங்களில் தொற்றுநோயின் ஒட்டுமொத்த இறப்புகளின் எண்ணிக்கை இயல்பை விட அதிகமாக உள்ளது தெரிய வந்திருக்கிறது. இது உலக அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே