கல்கி பகவான் விஜயகுமாருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 907 ஏக்கர் நிலத்தை, பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் ஆசிரமம் நடத்திவரும் கல்கி சாமியார், வருமானத்தை விட அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதாக வருமானவரித் துறைக்கு புகார்கள் வந்தன.
அதனடிப்படையில், கல்கி ஆசிரமம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த அக்டோபர் மாதத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது 409 கோடி ரூபாய் நிதி வசூலித்திருப்பது தெரியவந்தது.
மேலும் 90 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா, மருமகள் பிரீத்தா உள்ளிட்டோரிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் 907 ஏக்கர் நிலத்தை வாங்கிக் குவித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் சத்யவேடு, தமிழகத்தில் ஆரணி, உதகமண்டலம், கோவை, மதுரை, கர்நாடகாவின் பெல்காம் ஆகிய பகுதிகளில் வாங்கிக் குவித்திருந்த சொத்துக்களை வருமானவரித் துறையினர் முடக்கி வைத்துள்ளனர்.