9 வயது சிறுமி மர்ம சாவு: சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தபோது வெளிவந்த உண்மை!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள கே.குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. அவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 19-ந் தேதி காலையில் வீட்டில் களியும், கொள்ளு குழம்பும் செய்தார். பின்னர் ராஜேஸ்வரி, தனது மகள்கள் அர்ச்சனா (13), கீர்த்தனா (9), மாமியார் மாரம்மாள் (70) ஆகிய 4 பேருடன் உணவு சாப்பிட்டார். பின்னர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த ராஜேஸ்வரி காலையில் செய்த களி மற்றும் கொள்ளு குழம்பை சுட வைத்து 4 பேரும் சாப்பிட்டு விட்டு இரவு தூங்கினார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு ராஜேஸ்வரி உள்ளிட்ட 4 பேருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை உறவினர்கள் சிகிச்சைக்காக கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று 4 பேரும் வீடு திரும்பினார்கள். வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் அவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனால் மாரம்மாளை தவிர மற்ற 3 பேரையும் மீண்டும் கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி கீர்த்தனா பரிதாபமாக இறந்தாள். இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் கே.குட்டூருக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே வீட்டில் இருந்த மூதாட்டி மாரம்மாளும் இறந்து கிடந்தார். இதைத் தொடர்ந்து சிறுமி கீர்த்தனா, பாட்டி மாரம்மாள் ஆகியோரின் உடலை உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்தனர். தற்போது ராஜேஸ்வரியும், அர்ச்சனாவும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரி, அவரது மகள் அர்ச்சனா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள். மாரம்மாள், அவரது பேத்தி கீர்த்தனா ஆகியோரின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கெட்டு போன உணவை சாப்பிட்டதால் அவர்கள் இறந்தார்களா? அல்லது யாரேனும் விஷம் கலந்து கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன கீர்த்தனா 4-ம் வகுப்பு படித்து வந்தாள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அர்ச்சனா 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே